அப்பா
அப்பா
என் அப்பா இறைவனடி சேர்ந்து இன்றுடன் 23 ஆண்டுகள் கழிந்துவிட்டன ....1931ம் வருடம் தாராபுரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் எனும் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். பள்ளிகல்வியை தாராபுரத்தில் முடித்துக்கொண்டு ,வேலைக்காகவும் ,நிரந்தரமாக தங்கவும் கோவைக்கு குடிபெயர்ந்தது குடும்பம். இளம் வயதிலேயே தாய் இறந்துவிட்டதால் ,தன்னுடன் பிறந்த தம்பி மற்றும் அப்பாவுடன் (என் தாத்தா )வாழ்ந்துவந்தார் .சீட்டு கம்பெனி குமாஸ்த்தா வேலையில் சிறிதுநாள் பணி செய்துவிட்டு ,பின்னர் ஒரு ஜவுளிக்கடையில் குமாஸ்தாவாக சொற்ப சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார் . என் தாத்தா நெசவு செய்து வந்த நிலையில் , தம்பி இடைநிலை ஆசிரியராக கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் பணிக்கு சேர்ந்தார் . அவரவர்க்கு உரிய வயதில் என் அப்பாவிற்கும் ,என் சித்தப்பாவிற்கும் திருமணமாகிய நிலையில் என் தாத்தா இயற்க்கை எய்தினார் .
சிறு வயது முதலே என் மீதும், என் தம்பி மீதும் அதிக பாசம் வைத்திருந்தார் என் அப்பா .மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர் . ஒரு சில நண்பர்களை மட்டுமே கொண்டிருந்தார் .மனதில் உள்ள எதையும் வெளிகாட்டிக்கொள்ள மாட்டார் .சத்தமாக பேசாமல் மென்மையாக பேசும் குணம் கொண்டவர் .ஆடம்பரமாகவும், பகட்டாகவும் வாழ்வதும் ,உடை உடுத்திக்கொள்வதும் இல்லை . அரைக்கை சட்டை ,வேட்டி மட்டுமே அணிந்து கொள்வார் .வெளியூர் செல்லும் சமயத்தில் மட்டும் பேன்ட் அணிந்து கொள்வார். எதையும் சுத்தமாகவும் ,கச்சிதமாகவும் இருக்கவேண்டும் என எண்ணம் கொண்டவர் . இறை நம்பிக்கை இருந்தாலும் ,அதிகம் கோவிலுக்கு செல்லமாட்டார் . மணி , மணியாக தமிழும் ,ஆங்கிலமும் எழுதுவார் . தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,ஹிந்தி ஆகியன சரளமாக பேசுவார். SSLC வரை மட்டும் படித்ததால் ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது . இருப்பினும் ஆங்கிலம் எழுதவும் , படிக்கவும் தெரிந்துவைத்திருந்தார் . .உலக ஞானம் அதிகம் கொண்டவர் . டென்னிஸ் ,கிரிக்கட் ,புட்பால் ,அதிகம் ரசிப்பார். French open,Wimbledon and US open ஆகியன தொலைகாட்சியில் என் தந்தையுடன் சேர்ந்து ரசிப்போம்.ஓவியம் வரைவதில் மிக சிறந்தவராக இருந்தார் .பென்சில் ஷேடிங் முறையில் 1960 களில் வல்லபாய் படேல் , கஸ்தூரிபா ,மகாத்மா ,விவேகானந்தர் .....ஆகியோரின் படங்கள் வரைந்து வைத்திருந்தார், இதை பத்திரமாக லேமினேட் செய்து பாதுகாப்பாக இன்று வரை வைத்துள்ளேன் .
எனக்கும் ,என் தம்பிக்கும் நல்ல விஷயங்களை கற்று தந்தார் . தன்னுடைய பணி நிமித்தமாக வட இந்தியா சென்று திரும்பும் போது எங்களுக்காக வெளிநாட்டு "தபால் தலைகள் "அடங்கிய ஒரு பேக் மற்றும் வடஇந்திய இனிப்புகள் தவறாமல் வாங்கிவருவார் . அதிகாலை அல்லது இரவு நேரங்களில் ஊர் திரும்பும் போது ,தான் கொண்டு சென்ற பெட்டியை வைத்துவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருக்கும் வேளையில் , நான் அவரது பெட்டியை திறந்து பார்த்தால் இவை இரண்டும் தவறாமல் இருக்கும் . இன்று வரை என் தபால் தலை சேகரிப்புக்கு அடித்தளம் இட்டவர் என் தந்தை . இதனால் உலகின் நாடுகள் மற்றும் அதன் தலை நகர்கள் ,அந்தந்த நாடு பற்றிய விவரங்களை விக்கி பீடியா வரும் முன்னே தெரிந்து வைத்திருக்க காரணம் என் தந்தையே .
குடும்பம் வறுமையில் இருந்தாலும் , ஒரு சிறிய இடம் வாங்கி வீடு கட்டவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது . அது அவரது இறுதிவரை இயலாமல் போனது துரதிர்ஷ்ட்டமே கட்டில் வாங்கி ,பஞ்சு மெத்தையில் உறங்கும் பாக்கியம் அவருக்கு கடைசி வரை கிடைக்கவேயில்லை. வெறும் பாயில் படுத்து உறங்கும் அமைப்பே அவருக்கு கிடைத்தது .
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறநானூறு 312)
-- என்ற புறநானூற்று பாடலுக்கேற்ப
என் தந்தையும் என்னை தன்னை விட ஒரு படி மேலாக, ஒரு நல்ல கல்லூரியில் படிக்கவைத்தார் .எனக்கு திருமணம் விமரிசையாக செய்துவைத்தார் . பேரபிள்ளையை கொஞ்சி மகிழ்ந்தார்..எனது தம்பிக்கு திருமணம் செய்துவைக்கும் பாக்கியம் ஏனோ அவருக்கு இறைவன் அளிக்கவில்லை . நாங்கள் எல்லோரும் வளர்ந்து நன்றாக செட்டில் ஆகி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் நிலையை பார்க்க என் அப்பா இல்லையே என்பதை நினைக்கும் பொழுது ,லேசாக கண்ணீர் துளிர்க்கிறது . அதற்குள் அவருக்கு ஒரு நோயை கொடுத்து 23.03.1993 அன்று இறைவன் தன்னுடன் அழைத்துக்கொண்டான் .
என் அப்பா இப்பூவுலைகை விட்டு சென்றாலும் என் இதயத்தில் இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
எவ்வுலகில் நீங்கள் இருந்தாலும் எங்களை வாழ்த்தி ஆசீர்வதியுங்கள் அப்பா .....
அன்புடன்
உங்கள் பெரிய மகன்
This notes was posted in my Face book on Wednesday, 23 March 2016
ReplyDelete